Tuesday, May 6, 2008

இந்த ஆண்டு புதிதாக 5 பொறியியல் கல்லூரிகள்

சென்னை,6 மே 2008

தமிழகத்தில் விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்த ஆண்டு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்பை அவர் தாக்கல் செய்து கூறுகையில், "தமிழகத்தில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததன்படி, 2008-09-ம் ஆண்டில் விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தக் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகங்கள் தொடங்கும்" என்றார்.
"மாறுபட்ட பாடத்திட்டங்களாலும், தேர்வு முடிவுகளில் மதிப்பீட்டு மாறுபாடுகளாலும், மதிப்பெண்கள் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தாலும், மாணவர்கள் படும் சிரமத்தை களைய உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் குறித்த நேரத்தில் தேர்வுகளை நடத்தவும், தேர்வு முடிவுகளை அறிவிக்கவும், வகை செய்யும் விதத்தில் தேர்வு அட்டவணையை கொண்டு வருவதற்கு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று அவர் கூறினார்.
கலை மற்றும் அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர், படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு பெற முடியாத நிலையில் உள்ளனர் என்று கூறிய அவர், "இம்மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் கூடுதலாக தொழில் சார் படிப்பை அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home